கலைஞரின் மறைவையடுத்து, தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராகிறார். வரும் 28ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அவர் முறைப்படி தலைவராகத் தேர்வு பெறவுள்ள நிலையில், அவரிடம் கூடுதல் பொறுப்பாக உள்ள பொருளாளர் பதவி யாருக்கு என்கிற எதிர்பார்ப்பும் போட்டியும் அதிகரித்துள்ளது.
பொருளாளர் பதவிக்கு கே.என்.நேரு, பொன்முடி, ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களின் பெயர்கள் நீண்ட காலமாகவே அடிபடுகின்றன. இதற்காக இவர்களுக்குள் பலத்த போட்டி நிலவுவது குறித்த செய்திகளும் வெளியானபடி உள்ளன.
மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை, கலைஞரின் மரணத்திற்குப் பிறகு தனது ஒவ்வொரு நகர்வுக்கு முன்பும் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனில் தொடங்கி மூத்த பிரமுகர்களிடம் ஆலோசிக்கிறார். இதனைத் தொடர்ந்து துரைமுருகன், ரகுமான்கான் போன்ற மொழிப்போராட்டக் கள முன்னணியினருக்குத் தரவேண்டிய முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, வடமாவட்டத்தைச் சேர்ந்த சீனியருக்கு பொருளாளர் பதவி எனத் தீர்மானித்துள்ளாராம் மு.க.ஸ்டாலின். அந்தப் பதவியை எதிர்பார்த்த மற்றவர்களுக்கு கட்சியில் வலிமையான வேறு பதவிகளை முறைப்படி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.