மாநகராட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்,மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட கழக செயலாளருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசும்போது, ''எம்.ஜி.ஆர்.கட்சி தொடங்கி ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் முதல் தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி கண்ட தொகுதி திண்டுக்கல். தற்போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராமப்புற மக்களை ஏமாற்றி அதிமுக வெற்றி பெற்ற பகுதிகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவித்தது மாயையை ஏற்படுத்தியுள்ளனர். ஓட்டுப் போடும் இடத்திலிருந்து ஒட்டு எண்ணும் வரை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மீண்டும் ஜெ ஆட்சி அமையப் பாடுபட வேண்டும்'' என்றார்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக ஐம்பதாம் ஆண்டு பொன்விழா கொடியை சீனிவாசன் ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ் மோகன், ஜெ.பேரவை செயலாளர் பாரதிமுருகன் உள்படக் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.