தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகள் பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிந்த நிலையில், தற்போது எந்தெந்தக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்ற பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் உடன்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியே கசியத் தொடங்கும்போதே ஆங்காங்கே போராட்டங்களும் தொடங்கியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் தொடர்ந்த 2 தேர்தல்களில் அதிமுக அணியில் விஜயபாஸ்கர் வெற்றிபெற்று அமைச்சராக இருந்துள்ளார். அத்தொகுதிக்கு ஏராளமான அரசு நலத்திட்டங்களையும் தனது சிவிபி பேரவை மூலம் தன் சொந்த செலவிலும் நலத்திட்டங்கள் செய்துவிட்டு மீண்டும் அதே விராலிமலைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவையும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தொகுதிக்கே சம்மந்தமில்லாத ஆலங்குடித் தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் நெவளிநாதனும் விருப்ப மனு கொடுத்தது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தொகுதி அலுவலகம் திறந்து வைத்துக்கொண்டு தங்களுக்கு இந்த விராலிமலை தொகுதி வேண்டும் என்று நேற்று (09.03.2021) இரவு வரை அடம்பிடித்துள்ளனர். தொகுதிக்கு இவ்வளவு செய்தும் கடைசி நேரத்தில் இப்படி நோகடிக்கிறார்களே என்று அமைச்சர் அப்செட்டாகி இருக்கிறார்.
மற்றொரு கூட்டணியான திமுக கூட்டணியில் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுகவில் ஒருவரையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மாஜி உதயம் சண்முகம், பரணி கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் விருப்ப மனு கொடுத்துவிட்டு நேர்காணல் வரை சென்று தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருந்தனர்.
ஆனால், தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகன் ராமச்சந்திரனுக்காக அறந்தாங்கி தொகுதியை ஒதுக்குவதாக தகவல் கசிந்ததால், ‘கட்சியினர் காலமெல்லாம் கட்சியை வளர்க்க உழைத்துவிட்டு கடைசியில் கூட்டணிக்கு வேலை செய்ய முடியாது. கடந்த முறை வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ் ராமச்சந்திரன் இந்தமுறையும் போட்டியிட்டால் திமுகவினர் புறக்கணிப்போம். அதனால் திமுகவுக்கே தொகுதியை ஒதுக்க வேண்டும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தப் போராட்டம் இன்றோடு முடியாது, தொடர்ந்து நடக்கும் என்கிறார்கள் அக்கட்சியினர். போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது கூட்டத்தில் நின்ற ஒரு தொண்டர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.