Skip to main content

சீமானுக்கு திமுகவின் வரலாறு தெரியுமா? - கொதிக்கும் திமுக தொண்டர்

Published on 01/02/2023 | Edited on 02/02/2023

 

A DMK volunteer recounting DMK's past achievements

 

சென்னை மெரினா கடற்கரையில் வங்கக்கடலில் கலைஞரின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரை ஓரம் அமைக்கப்படுவதால் இந்திய ஒன்றிய அரசின் கடற்கரை ஓர பாதுகாப்பு அமைப்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 31 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பலதரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, பேனா சின்னத்தை வைத்தால் நானே உடைப்பேன் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் இந்த பேச்சு திமுகவினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் திமுகவினர், திமுக ஆதரவாளர்கள் சீமானின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீமானுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு காலத்தில் சர்வாதிகாரம் நடத்திய எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவரையே எதிர்த்தவர்கள் நாங்கள் என்கின்றனர் திமுகவினர்.

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார். திருச்செந்தூர் முருகர் கோவிலில் இருந்த வைரவேல் காணாமல் போனது. இதனை கண்டுபிடித்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் மரணமடைகிறார். இந்த மர்ம மரணத்துக்கு பின்னால் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்க்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள் என கலைஞர் குற்றம்சாட்டினார். இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பால் நியமிக்கப்பட்டார். அவரின் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார். அந்த அறிக்கையை அரசு வெளியிடவில்லை. 1984 நவம்பர் 24 ஆம் தேதி பால் கமிஷன் அறிக்கையை எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.

 

அரசின் அறிக்கையை வெளியிட்டதற்காக எம்.ஜி.ஆர் காவல்துறையை ஏவினார். கலைஞரை கைது செய்ய கோபாலபுரத்துக்கு சென்னை காவல் ஆணையர் தலைமையில் போலீஸ் படை வந்தது. என் தலைவனை கைது செய்வீர்களா என கோபமான திமுகவினர் காவல் ஆணையர் காரை தீ வைத்து எரித்தனர். போலீஸ் தடியடி நடத்தி திமுகவினரை கலைத்து கலைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

 

பிரதமராக இருந்த இந்திராகாந்தி படுகொலையால் பிரதமரான ராஜிவ்காந்தி நாடாளுமன்றத்தை கலைக்கச் செய்தார். மக்கள் இந்திராகாந்தி படுகொலையால் அனுதாபத்தில் இருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி. உடல்நலக்குறைவால் அமெரிக்கா ப்ரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காங்கிரசுடன் அதிமுக கூட்டணியில் இருந்தது. மக்களின் அனுதாபத்தை ஓட்டாக்க நினைத்து சட்டமன்றத்தை கலைக்கச் செய்தது அதிமுக. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்துக்கும் தேர்தலைச் சந்தித்தது. நோவுக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு என மக்களிடம் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றது. பெரிய மெஜாரிட்டி இருக்கிறது என தலை கால் புரியாத நிலையில் எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார். 

 

அப்போது, அரசினர் தோட்டத்தில் கட்சிகளுக்கு அரசே அலுவலகம் ஒதுக்கி தந்து இருந்தது. எதிர்க்கட்சி என்பதால் பெரிய அலுவலகக் கட்டிடம் திமுகவுக்கு தரப்பட்டிருந்தது. தேர்தலில் திமுக தோற்று திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருந்ததால் அரசினர் தோட்டத்தில் திமுகவுக்கு தந்திருந்த அலுவலகத்தை காலி செய்யச் சொல்லியதோடு ஒற்றை அறை கொண்ட ஒரு கட்டடத்தை ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். காலி செய்ய முடியாது என எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் அறிவித்தார். இரவோடு இரவாக திமுக அலுவலகத்தில் இருந்த கலைஞரை போலீஸை வைத்து தூக்கி வெளியே எரிந்தார் எம்.ஜி.ஆர். இந்த சம்பவமே அண்ணா அறிவாலயம் கட்டக் காரணமானது. இதில் கோபமான திமுக மாணவர் அணியினர் தன்னிச்சையாக களத்தில் இறங்கி திமுக தலைவரை வெளியேற்றிய அந்த அலுவலகம் யாருக்கும் பயன்படக்கூடாது என தீவைத்து எரித்தார்கள்.

 

இந்தியாவில் ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. வி.பி.சிங் பிரதமராக இருந்தார். ஜனதா தளத்தோடு கூட்டணியில் திமுக இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சராக தலைவர் கலைஞர் இருந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இனியன் சம்பத் இருந்தார். ஜனதா ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் பாரத் பந்த் நடத்தியது. இனியன் சம்பத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையின் கீழே கலைஞரின் உருவபொம்மையை கொண்டு போய் எரிக்க முயன்றார்கள். அன்று பந்த் என்பதால் சென்னையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பச்சையப்பன் கல்லூரி விடுதி மாணவர்கள் சாப்பிடுவதற்காக ரெகுலராக வரும் ஹோட்டலுக்கு வந்தனர். அப்போது  மாணவர் பட்டாளம் கலைஞரின் உருவபொம்மை எரிப்பதை பார்த்துவிட்டு இனியன் சம்பத் குழு மீது தன்னிச்சையாக தாக்குதல் நடத்தினர். போலீஸார் மாணவர்களிடமிருந்து இனியன் சம்பத்தை மீட்டனர். தனது மனைவி டெய்சி ராணியோடு திருவல்லிக்கேணி இ1 காவல்நிலையத்தில் போய் புகார் தந்தார் இனியன். காவல்நிலையத்துக்குள்ளும் புகுந்து அவரை மாணவர் பட்டாளம் தாக்கியது.

 

இதுவெல்லாம் திமுக தொண்டர்களின் கடந்த கால வரலாறு. தலைமையை வரைமுறையில்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் பேசும்போதும், கட்சியை அவமானப்படுத்தினாலும் திமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தனர். இப்போது திமுக தொண்டர்கள் அமைதியான முறையில் சாத்வீக முறையில் நடந்து கொள்வதால்தான் இப்படி சீமானெல்லாம் மறைந்த எங்கள் தலைவரை அவமானப்படுத்தி பேசுகிறார் என வேதனையுடன் கொதிக்கிறார்கள் மூத்த கழக முன்னோடியினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்