அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து தற்போது ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி எனப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார்.
நேற்று முன் தினம் கோவை செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தினைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சட்ட விதிகளைச் சுயநலத்திற்காக அவர்கள் திருத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது. இன்று நாம் எம்ஜிஆர் வகுத்துக்கொடுத்த சட்டவிதிகளின் படி கழகம் நடைபெற வேண்டும் என்று தர்மயுத்தத்தைத் துவங்கியுள்ளோம்." எனக் கூறியிருந்த நிலையில்,
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இதற்கு முன் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். இதன் பின் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்றார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவை தான் குற்றம் சொல்லுகிறது.
அதேபோல ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டார். அதனால் தர்மயுத்தம் 2.0 என்பது ஒரு கர்ம யுத்தம். கட்சியைக் காட்டிக்கொடுத்து ஆட்சி இருக்கக்கூடாது என்று அதிமுகவிற்கு எதிராக ஓட்டு போட்டீர்கள். எம்ஜிஆர் மாளிகையினை காலால் எட்டி உதைத்து கோப்புகளை எல்லாம் எடுத்துச் சென்றீர்கள். இதெல்லாம் யாருடன் சேர்ந்து கொண்டு செய்தீர்கள். திமுகவுடன் சேர்ந்து கொண்டு தானே செய்தீர்கள். திமுக ஆதரவு இல்லாமல் இந்த விஷயங்கள் எல்லாம் நடக்குமா? நாங்கள் 62 பேர் சேர்ந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவராக உதயகுமாரைச் சொல்லும் போது அதை சபாநாயகர் ஏற்கவேண்டும். ஆனால் மரபுகளைத் தூக்கி வீசிவிட்டு, இது குறித்து முடிவுகளை எடுக்காமல் இருப்பதென்பது எந்த விதத்தில் நியாயம். ஸ்டாலினின் முழு ஆதரவோடு திமுக இதற்கு பக்க பலமாக செயல்படுகிறது” எனக் கூறினார்.