2017 ல் நடந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஜெயித்தும் கூட, அந்தக் கட்சி எம்.எல்.ஏ. ஷியாம் குமாரைக் கவர்ந்து, ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்துவிட்டது பா.ஜ.க. அதனால் ஷியாம் குமாரின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று அப்போது காங்கிரஸ் எழுப்பிய புகார், சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மீண்டும் இது பற்றி மணிப்பூர் சபாநாயகரிடம் முறையிடவேண்டும் என்றும் அவர் நான்கு வாரத்தில் தன் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்புரைத்ததோடு, இது போன்ற தருணங்களில் சபாநாயகர்களின் அதிகார வரம்பை, மத்திய அரசு வரையறுக்க வேண்டும் என்றும் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இது தமிழகத்திலும் அரசியல் ரீதியிலான மிக முக்கிய உத்தரவாகப் பார்க்கப்படுதாக சொல்லப்படுகிறது.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/De6H1dGVqtdQ3xA1ke6SAI99WBNfyk7BMT330RW8nQw/1580300119/sites/default/files/inline-images/391_1.jpg)
இந்த நிலையில் தமிழகத்தில் ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க் கள், எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தபோது, அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் போயிருக்கும் தி.மு.க., அதே நீதிமன்றத்தின் இப்போதைய மணிப்பூர்த் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, நீதி கேட்டிருக்கிறது. தி.மு.க.வின் இந்த அதிரடி மூவ், ஓ.பி.எஸ். தரப்பை கலக்கமடைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தீவிரமாக டிஸ்கஷன் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் மத்திய அரசின் சப்போர்ட் தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால், அவர்கள் டெல்லியைத் தொடர்புகொண்டு பேசினார்கள். டெல்லியோ, "கவலை வேண்டாம். உங்கள் ஆட்சிக்காலம் முடிகிறவரை நீங்கள் பதவியில் இருப்பதில் சிக்கல் வராது. அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதற்கேற்றபடி உங்கள் செயல்பாடும் இருக்க வேண்டும்' என்று கண்டிஷனோட தைரியம் சொல்லியிருக்கிறது. எனினும், ஓ.பி.எஸ். தரப்பின் கலக்கம் முழுதாகத் தீரவில்லை என்று சொல்கின்றனர்.