‘தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்’ என்கிற தலைப்பில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்திவருகிறது திமுக. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏவும், முன்னால் அமைச்சருமான எ.வ.வேலு கலந்துக்கொண்டு, மக்கள் மத்தியில் மத்திய – மாநில அரசுகளின் அராஜகம், லஞ்சம், ஊழல், மக்கள் பாதிப்பு, வரி உயர்வு போன்றவற்றை போன்றவற்றை பற்றி பேசினார்.
அதன்படி ஜனவரி 21ந்தேதியான இன்று கீழ்சிறுப்பாக்கம், ராதாபுரம், சேர்ப்பாப்பட்டு, சே.கூடலூர் என 8 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் எ.வ.வேலுவின் கிராமம் சே.கூடலூர். அவரது ஓட்டும் இந்த ஊரில் தான் உள்ளது.
இந்த சே.கூடலூர் ஊராட்சியில் நடைபெற்ற சபை கூட்டத்துக்கு வேலு வந்தபோது, கூட்டம் நடைபெறும் இடத்துக்கு முன்பாக 20 பெண்கள் சாலையின் இரண்டு புறமும் நின்றுக்கொண்டு காரைவிட்டு இறங்கி கட்சியினருடன் எ.வ.வேலு நடந்துவரும்போது ஆரத்தி எடுத்தனர், அதோடு அவர் நடந்து வந்த பாதையில் அவர் கால்களை நோக்கி பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர் பெண்கள். அந்த பூக்கள் மீது நடந்து சென்று ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேச தொடங்குவதற்கு முன்பு, வரவேற்பில் அதிருப்தியான வேலு, எதுக்கு இந்த மாதிரி ஏற்பாடு செய்திங்க என தண்டராம்பட்டு ஒ.செ ரமேஷ்சையும், நிர்வாகிகளையும் அங்கேயே சத்தம் போட்டார் என்றார்கள்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய கட்சியினர் சிலர், தலைமையின் அறிவுறுத்தல்படி, மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் ஒரே மாதிரியான பேனர்களை வடிவமைத்து இரண்டு நாட்களுக்கு முன்பே பிரிண்ட் செய்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் அனுப்பி அதை கூட்டம் நடக்கும் இடங்களில் வைக்கச்சொல்கிறோம். பொதுமக்களுக்கு கூட்டத்தை பற்றி தெரிவிக்க ஊரில் முக்கிய இடங்களில் ஊராட்சி சபை கூட்டம் பற்றி போஸ்டர் ஒட்டுகிறோம். இதெல்லாம் ஒ.செ. கள் கண்காணிப்பில் ஒவ்வொரு ஊராட்சி செயலாளர்கள் தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். கூட்டத்துக்கு வரும் எம்.எல்.ஏவுக்கு, ஊராட்சி செயலாளர் மட்டும் ஒரு சால்வை போடலாம், மற்றவர்கள் யாரும் போடத்தேவையில்லை எனக்கூறப்பட்டுயிருந்தது. அதன்படி தான் எல்லா இடத்திலும் நடந்துவந்தது. அவரது சொந்த ஊரில் தான் கொஞ்சம் தடபுடலாக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துவிட்டார்கள் என்றனர்.
வேலுவுடன் உள்ள ஒரு பிரமுகர்தான் அய்யாவோட சொந்த ஊரில் நடைபெறும் கூட்டத்துக்கு வரும்போது, கொஞ்சம் தடபுடலா இருக்கட்டும் எனச்சொன்னார். அதன் அடிப்படையிலேயே அப்பகுதி கட்சியினர் ஆரத்தி எடுக்க, மலர் தூவ ஏற்பாடுகளை செய்தனர் என்கிறார்கள். இந்த தடபுடல் வரவேற்பு படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி திமுக நடத்தும் கூட்டத்தை பாரீர் என அமமுகவினர் விமர்சனத்தை உருவாக்கியுள்ளனர்.