Skip to main content

"கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்த வேண்டாம்" - மு.க.ஸ்டாலின் அறிவுரை!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

dmk leaders election campaign mk stalin statement

 

தி.மு.க.வினர் பரப்புரையின் போது கண்ணியமாகப் பேச வேண்டும் என்று கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்புடைய கட்சி உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பரப்புரை செய்யும் போது நமது கழக மரபையும், மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

பரப்புரையில் ஈடுபடும்போது கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கட்சித் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும். தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சியினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி, ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

முதல்வரை ஆ.ராசா அவதூறாகப் பேசினார் என சர்ச்சை எழுந்த நிலையில், மு.க.ஸ்டாலின் இவ்வாறு கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்