தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் நட்சத்திர ஹோட்டலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஜெ அன்பழகன் பேசும் போது, நமது கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி தலைவர் எடப்பாடியை சந்தித்து பேசியுள்ளார். அதோடு பல விஷயங்களை எடப்பாடியிடம் பேசியுள்ளார் என்று தகவல் வருகிறது. அவர்களை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டால் தான் நாம் வெற்றி பெற முடியும் என்று பேசியுள்ளதாக கூறுகின்றனர். இதனையடுத்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சியினரை விடுங்கள் நமது கட்சியினர் சிலரே எடப்பாடி பழனிச்சாமியோடு மறைமுகமாக தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை இன்றோடு நிறுத்திவிடுங்கள் என எச்சரிக்கிறேன் என கூறியதாக சொல்கின்றனர். இதனால் திமுகவில் யாரை ஸ்டாலின் குறிப்பிடுகிறார் என்று தெரியாமல் கட்சியினர் பயத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கட்சிக்காக தீவிரமாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக கூறுகின்றனர்.