முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் ஸ்டாலின் எழுதிய கடிதத்திலும் அதற்கு பிறகான அறிக்கைகளிலும் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லை. ஆனால் அ.தி.மு.க-தி.மு.க. அரசியல் இந்த கரோனா காலத்திலும் ஓயவில்லை என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதுபற்றி விசாரித்த போது, மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு கருவிகள், மக்களுக்கான நிவாரணம் சம்பந்தமாகதான் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்டு வருவதாக சொல்கின்றனர். ரேசனில் கொடுத்த ஆயிரம் ரூபாய், இப்போது உயர்ந்திருக்கும் விலைவாசியில் நாலு நாளைக்குக்கூட போதுமானதாக இல்லை. இலவசமாக கொடுக்கப்படும் ரேஷன் பொருட்களும் சரியாக கிடைப்பதில்லை. ஸ்டாக் இல்லை என்று புகார் கூறுகிறார்கள். அதேபோல் மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்துக்கு கேட்ட எடப்பாடி அரசு, டெல்லி அனுப்பிய 510 கோடியை வாங்கி வைத்து என்ன செய்வது என்று குழம்பி வருவதாக சொல்கின்றனர். தமிழகத்துக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையையும் முழுதாக கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை உரிமையோடு கேட்கும் வலிமை எடப்பாடி அரசுக்கு இல்லை. அதோடு தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்களிடம் நிதி கோரினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 5000 கோடியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளார், குறைந்தது 1000 கோடியாவது உடனடியாக தேறிவிடுமென்று நினைத்துள்ளார். ஆனால் பலரும் குறைந்த அளவு நிதியை மட்டும் கொடுத்துள்ளனர். கடந்த 2 வாரத்தில் வெறும் 135 கோடி ரூபாய் அளவுக்குதான் நிவாரண நிதி கிடைத்துள்ளது. இதனால் முதல்வர் ரொம்பவே அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.