'ஒன்றிணைவோம் வா' செயல்பாடு நிறைவடைந்த நிலையில் தி.மு.க. தரப்பில் என்ன மூவ் நடந்துக்கொண்டு இருக்கிறது என்று விசாரித்த போது, உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ள தி.மு.க.வினரிடம் காணொளியில் ஸ்டாலின் தொடர்பு கொண்டு, மக்களுக்கு உதவச் சொல்லியிருக்கிறார். ஆங்காங்கே தி.மு.க நிர்வாகிகள் உதவிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒன்றிணைவோம் வா முடிந்தபிறகு, சென்னை அண்ணா நகரில் செயல்பட்டுவந்த பிரசாந்த் கிஷோரின் ’ஐ பேக்’ அலுவலகக் கிளையும் மூடப்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது. பீகார் தேர்தலில் கவனம் செலுத்தியபடியே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கான வியூகங்களையும் வகுக்கத் தொடங்கியிருக்கார் பிரசாந்த் கிஷோர்.
இந்த நிலையில் தி.மு.க.-வில் இருக்கும் சீனியர் நிர்வாகிகளைக் கேட்டால், தேர்தலில் இளைஞர்களுக்குத்தான் பெரும்பாலான சீட்டுகளைக் கொடுக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறுவதாகவும், 65 வயதைக் கடந்த சீனியர்கள் எவருக்கும் சீட் தரக்கூடாது என்றும் ஆலோசனை சொல்லியிருப்பதாகவும் கூறிவருகின்றனர். அப்படிப் பார்த்தால் பெரும்பாலான கட்சியின் வி.ஐ.பிக்களுக்கே சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். அது களப்பணியில் சுணக்கத்தை ஏற்படுத்திடும் என்று தி.மு.க. சீனியர்கள் நினைப்பதாகச் சொல்லப்படுகிறது. சித்தரஞ்சன் சாலை குடும்பமும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறது. அதனால் பிரசாந்த் கிஷோருக்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும் இது சம்பந்தமாக உரசல் என்றும் கூறுகின்றனர். இதனால் தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.