தி.மு.க.வுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துவரும் ’ஐபேக்’ டீம் மீது, தி.மு.க ஐ.டி.விங்கிற்கு அதிருப்தி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றி விசாரிகத்த போது, தி.மு.க. போலவே மேற்கு வங்க முதல்வர் மம்தாவோடும் இப்போது தேர்தல் வியூகத்துக்கான ஒப்பந்தம் போட்டிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக், தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்றத் தொகுதியிலும் கள ஆய்வை நடத்துவதற்காக, அங்கங்கே ஆட்களை நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி சிறிதளவு கூட தங்களிடம் கலந்து பேசுவதில்லை என்கிற ஆதங்கம், தி.மு.க.வின் தொழில் நுட்பப் பிரிவிற்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் பீகாரில் கடந்த முறை ஐபேக்கோடு ஒப்பந்தம் போட்டிருந்த ஐக்கிய ஜனதா தளம், இப்போது அதற்குப் பதிலாக வேறொரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த முறை ஐபேக் டீம்தான், நிதீஷ்குமாரை முதல்வராக்க வேலை பார்த்தனர். இதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதாதள துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமித்தார் நிதிஷ் குமார். இடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கிவிட்டார் நிதீஷ். இப்போது, அவர், ஐபேக் போலவே அரசியல் வியூகத்தில் புகழ்பெற்ற ஜே.பி.ஜி. நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்தார். இதை ஜான் ஆரோக்கிய சாமி என்பவரும், கிரீஸ் தாக்கே என்பவரும் நிர்வகிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே சித்தராமையா, உத்தவ் தாக்கரே, சரத்பவார், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்காக களமிறங்கிய நிறுவனம் என்று சொல்லப்படுகிறது.