புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சோதனைச்சாவடியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “விராலிமலை தொகுதிக்கு கொடுக்கப்பட்ட கொடை வள்ளலாக விஜயபாஸ்கர் திகழ்ந்து வருகிறார். இவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவிலே எந்த மாநிலமும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்த கொடிய நோயை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர். எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர் விஜயபாஸ்கர். விராலிமலை தொகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் விவசாயிகளின் கோரிக்கையான காவிரி - வைகை - குண்டாறு திட்டமானது விவசாயிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
விவசாயத்திற்கு உயிராக இருப்பது நீர். ஓராண்டு, இராண்டாண்டு அல்ல சுமார் 50 ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த அரசு அதிமுக அரசு. அப்படிப்பட்ட திட்டத்தையே இந்த திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. மக்களின் ஆதரவோடு மீண்டும் அதிமுக அரசு அமைந்த உடன் அந்த திட்டம் நிறைவேற்றப்படும். காவிரி - வைகை - குண்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டால் விராலிமலை தொகுதி மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கும். வேலைவாய்ப்பு மற்றும் விவசாய பணிகள் சிறக்கக்கூடிய அளவிற்கு இந்த திட்டம் ஒரு உன்னதமான திட்டமாகும். இந்த திட்டத்தையே கிடப்பில் போட்டு வைத்துள்ள திமுக அரசுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
மக்களுக்கு அந்தந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அம்மா மினி கிளினிக்கை அதிமுக அரசு கொண்டு வந்தது. அந்த திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் பணி 12 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக அரசில் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தையும் முடக்கிய கட்சி தான் திமுக கட்சி. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உட்பட அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. திமுக அரசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வேரோடு அழிக்க வேண்டும். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் விராலிமலை தொகுதியில் தான் அதிக வாக்குகள் பெற்ற தொகுதி என்று தமிழக முழுவதும் எதிரொலிக்க வேண்டும்” என்றார்.
இந்த கூட்டத்தில் விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் நாகராஜ், திருமூர்த்தி, ஏ.வி. ராஜேந்திரன், மற்றும் விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பைபாஸ் சாலையிலிருந்து பொதுக்கூட்ட மேடை வரை பூரண கும்ப மரியாதை உள்ளிட்ட குதிரை நடன வரவேற்பு, தாரை தம்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.