கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு எதையுமே கோவைக்கு செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''ஐம்பது ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை நாம் கொடுத்திருக்கிறோம். இன்றைக்குக் கோயம்புத்தூரில் சென்னை விட இத்தனை பாலங்கள், கூட்டுக் குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், அதேபோல பேருந்து நிலையம், ஏர்போர்ட் விரிவாக்கம், மேற்கு புறவழிச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கு நிதி ஒதுக்கினது, ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கியது, ஆறு புதிய கல்லூரிகள் என கோவை மாவட்டத்திற்கு என்னென்ன அவசியமோ அத்தனையும் செய்துள்ளோம்.
முதன்மையாக எங்குமே டிராபிக் நிற்கக்கூடாது என்பதற்காக நாங்கள் நல்ல சாலை வசதிகளையும் செய்திருந்தோம். இன்று அவசியமான திட்டங்கள் பார்த்தீர்கள் என்றால் மெட்ரோ ரயில் நாம் அறிவித்திருந்தோம். ஆரம்பக்கட்ட ஸ்டடி நடந்தது. இப்ப அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த மாதிரி திட்டங்களை எல்லாம் திமுக தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் எதையுமே செய்யவில்லையே. நாங்கள் 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சி கொடுத்திருக்கிறோம். அதை மக்களே பேசுகிறார்கள். இந்த ஒன்றரை வருடத்தில் திமுக எதுவுமே செய்யவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும்'' என்றார்.