'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம், நாற்பதே நாட்களில் 18 லட்சம் பேர் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உதவி பெற்றுள்ளனர். உதவி கிடைத்தவர்கள் கொடுத்து வரும் பேட்டிகள், என்னைப் பெருமை கொள்ளவும், மனநிறைவடையவும் செய்கின்றன'' என 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் வெற்றி குறித்து, தனது அறிக்கையில் குறிப்பிட்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இதற்கு அ.தி.மு.க. ஆளுந்தரப்பு காட்டியிருக்கும் எதிர் வினை, முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
தி.மு.க.வின் திட்டத்தால் மாநிலம் முழுவதும் 18 லட்சம் பேர் உதவி பெற்றதோடு, உதவி கோருவோரின் மனுக்களும், மா.செ.க்களின் மூலமாக மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைப்பட்டன. தி.மு.க.வுக்கு இது பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில், உடனடியாக ஒரு ரீடேக் வீடியோவை சோஷியல் மீடியாக்களில் பரப்பியது அ.தி.மு.க. தரப்பு. அதில் காஞ்சிபுரம் மாலா, சிவகங்கை நளாயினி, தூத்துக்குடி முத்துக்காளை, விழுப்புரம் இதயத்துல்லா ஆகிய நான்குபேர், தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் உதவியும், விலையில்லா ரேசன் பொருட்களும் கிடைத்தன. ஒன்றிணைவோம் என்றால் என்னவென்றே தெரியாது. எங்களது பெயரை தி.மு.க.வினர் பயன்படுத்தி, பொய்ப் பரப்புகின்றனர் எனக்கூறி இருந்தனர்.
வீடியோவில் இருந்த சிவகங்கை மாவட்டம், ஒப்பிலான்பட்டியைச் சேர்ந்த நளாயினி, "எஸ்.மாம்பட்டி ரேசன் கடையிலதான் எனக்கு கார்டு இருக்கு. அங்கிருந்து என்னோட கார்டில் திருத்தம் செய்யணும்னு கூப்பிட்டாங்க. அங்கே போனதும், இங்கு வாங்கின பொருட்களை மட்டும் சொல்லுங்க. கணக்குக் காட்டணும்னு சொல்லி வீடியோ எடுத்தாங்க. அதோடு, தி.மு.க. தரப்புல உதவி கேட்கலைன்னு சொல்லு, இல்லைனா இனிமேல் பொருட்கள் வாங்க முடியாதுன்னு மிரட்டினாங்க. உண்மையில் முதலில் உதவியது தி.மு.க.காரங்கதான்'' என்றார் பரிதாபமாக. இதுபோலவே மற்றவர்களையும் ரேசன் கடையில் வைத்து வீடியோ எடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து பேசிய சிவகங்கை தி.மு.க. மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான திருப்பத்தூர் எம்.எல்.ஏ. பெரியகருப்பன், "அந்தப் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் நிவாரண உதவிகள் செய்த நிலையில், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் உதவிகேட்டு அந்தம்மா வந்தார். அதன்படி, ஒன்றிய து.செ. முத்துகுமார் மூலம் உதவிகள் செய்து கொடுத்தோம். இது வீடியோவாகவும், புகைப்படமாகவும் எங்களிடம் உள்ளது. இது பொறுக்காமல் அ.தி.மு.க. அரசு கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறது'' என்றார் ஆவேசமாக.
இதுபோலவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினரால் தூண்டப்பட்ட மாலாவின் நிலை பற்றி எழிலரசன் எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளரை இதயத்துல்லா எனப் பெயர் மாற்றி, தி.மு.க.வுக்கு எதிராகப் பேச வைத்திருப்பதை அந்த மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தினரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.