சமீபத்தில் தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் மோதல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் தினகரனின் அமமுக கட்சியில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் அதிமுகவில் இணைவதை ஓபிஎஸ் விரும்பவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் திமுகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் தேனி மாவட்ட திமுக நிர்வாகிகள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் திமுகவில் இன்று தங்க தமிழ்ச்செல்வன் இணைவார் என்றும் அவருக்கு தேனி மாவட்ட அளவில் திமுக பொறுப்பு கொடுக்க உள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வேறு கட்சியில் இருந்து வருபவர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு கலைஞர் காலத்தில் இருந்தே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி வரை அதிமுகவில் இருந்து திமுக வந்தவர்கள் தான்.
அவர்கள் கட்சியில் இணைந்த உடனே பல முக்கிய பொறுப்புகளை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் திமுக தலைமை கொடுத்து வருகிறது. இதனால் மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் திமுகவின் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கும் நிர்வாகிகள் சற்று வருத்தத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகையால் திமுக தலைமை கட்சியில் இணைபவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல் கொள்கையோடு உள்ள திமுக தொண்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று திமுக தொண்டர்கள் தெரிகின்றனர்.