கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் முகமது ரகுமான் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இவர் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில், புதன்கிழமை அன்று வடக்கு வீதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கப்பட்டது. இதில், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இதில் தி.மு.க. நகரச் செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் 500- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த செயல் வீரர்கள் கூட்டம், இளமையாக்கினார் கோவில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்து அனைவரும் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கூட்டணிக் கட்சியான தி.மு.க. நகரச் செயலாளர் செந்தில்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பால அறவாழி ஆகியோருடன் சென்று வேட்பாளர் அப்துல்ரகுமான் சார் ஆட்சியர் மதுபாலனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.