ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பிரச்சார வாகனத்தில் நின்று பேசிய கனிமொழி, ''வேட்டி கட்டியவனாக இருந்தால், மீசை வைத்த ஆணாக இருந்தால் இதற்கெல்லாம் பதில் சொல் என்று கேட்கிறார் பழனிசாமி. நீங்க எந்த மண்ணில் நின்று கொண்டு இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்மை அழிய வேண்டும், அந்த திமிர் அழிய வேண்டும் என்று சொன்ன பெரியாரின் மண்ணில் நின்று கொண்டு இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.
எங்க அண்ணனை பார்த்து நீ ஆண்மகனாக, வேட்டி இருக்கா, மீச இருக்கா என்று எல்லாம் கேக்குற. இதெல்லாம் இருக்கு. எனக்கு தெரியும். எங்கள் அண்ணன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக யார் காலில் விழுந்திருக்கிறார். கவர்னரை சட்டமன்றத்திலிருந்து வெளியேற செய்யக்கூடிய தைரியம் இருந்த தலைவர் மு.க.ஸ்டாலின். யாருக்காகவும் பயந்ததில்லை. இந்த உலகமே பார்த்து பயந்து கொண்டிருக்கக்கூடிய பிஜேபி கட்சியையே எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய முதல் குரல் தமிழகத்தின் குரல், அது மு.க.ஸ்டாலின் குரல். எதற்கும் அஞ்சியதில்லை, பின்வாங்கியதில்லை. தன் கொள்கைகளை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால், வேட்டி இருக்கா ஆண்மகனா என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்க கூடிய பழனிசாமி இடம் கேட்கிறேன், நீங்கள் காலில் விழுந்த கதை எல்லாம் அத்தனை பேரும் பார்த்தோம். இன்னைக்கு தான் ஜெயலலிதா இல்லை என்பதால் தமிழ்நாட்டில் நிற்கும் பொழுது நெஞ்சை நிமிர்த்தி முதுகெலும்பை நிமிர்த்தி பேசுகிறீர்கள். இல்லையென்றால் எந்த அளவிற்கு குனிந்து கொண்டு நின்றார்கள் என்று எங்களுக்கு தெரியும்'' என்றார்.