கரோனா பரவல் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மே 25ந் தேதி காலை 11 மணிக்கு தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ அறிவித்திருந்தார். கூட்டம் நடந்தால் தெற்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் 100க்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்பதாக இருக்கும்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளபோது கட்சி கூட்டங்கள், கட்சி அலுவலகத்துக்குள் நடத்த அனுமதியுண்டா என அரசு தரப்பில் நாம் விசாரித்தபோது, கட்சி நிகழ்ச்சிகள் உள்ளரங்க கூட்ட நிகழ்வாக இருந்தாலும் அனுமதியில்லை, கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறு எனத் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து நாம் ''தி.மு.க. நிர்வாகிளைக் கூட்டத்துக்கு அழைக்கும் வேலு -144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்'' எனச் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலர் எ.வ.வேலுவிடம் விவாதித்துள்ளனர். இதையடுத்து, ''நாளை 25.05.2020 நடைபெற இருந்த மாவட்ட செயற்குழு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எ.வ.வேலு கட்சியினருக்குத் தெரிவித்துள்ளார்.