மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. காலை 11 மணி அளவில் மேடைக்கு வந்த கமல், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து அவர் பேசுகையில், “கட்சியின் உயர்நிலைக்குழு கலைக்கப்பட்டு புதிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா என்ற சுரேஷ், செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ண குமார், குமாரவேல், மவுரியா, மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரி ராஜன், தங்கவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நம் அனைவருக்கும் மிக முக்கியமான நாள். மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நமது உயர்நிலைக் குழு கலைக்கப்படுகிறது.
அக்குழுவில் சிறப்பாக தன்னலம் பாராமல் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்காக உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு, உள்ளச்சுத்தியுடன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நமது உயர்நிலைக் குழு உறுப்பினர்களான ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமர வேல், ஏ.ஜி.மவுரியா, எஸ். மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், ஆர்.தங்கவேல் ஆகியோர் இனி மக்கள் சேவையை மகத்தாக செய்து முடிப்பதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இன்று முதல் செயல்படத் தொடங்கி கட்சியினை வழி நடத்துவார்கள். தொண்டர்களும், மற்ற நிர்வாகிகளும் இவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரும், தொகுதி வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.