'திருமண வீடுகளுக்கு சென்று மணமக்களை வாழ்த்துவதை விடுத்து அரசியல் கட்சிகளுக்கு சாபம் விடுவதுதான் திராவிட மடலா?' என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ''இன்று காலையிலே ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட மாநிலத்தினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மணமக்கள் நீடூழி வாழ வேண்டும்; அவர்களுடைய திருமண பந்தத்தில் இணைந்து நீண்ட காலம் இணைந்து தங்களுடைய குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டும்' என்ற வாழ்த்துகளை மீறி மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை திருமண விழாவில் வைத்திருக்கிறார். வழக்கமாக நாம் கல்யாணத்திற்கு போகும்போது மணமக்களை வாழ்த்தி விட்டு, அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு வருவது வழக்கம். அந்த இடத்திலும் பேசலாம் தவறு கிடையாது. ஆனால், வருகின்றவர்களுடைய மனதும், வருகின்ற வாழ்த்துகளும் நேர்மறையாக மணமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
அந்த திருமண விழாவில் அமர்ந்துகொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, எதிர்க்கட்சிகளுக்கு சாபம் கொடுப்பது இதுதான் இவர்கள் நினைக்கின்ற திராவிட மாடலா? நல்ல இடங்களில் கூட போய் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசுவதை அநாகரீகமான ஒன்றாகப் பார்க்கிறோம். மத்திய அரசை பற்றி, பாஜகவை பற்றி, மோடியை பற்றி அவர் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பேசியது என்பது 100 சதவீதம் உண்மையான ஒன்று. அவர் எங்கும் பொய் பேசவில்லை. எந்தெந்த மாநிலங்களில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்பதை விளக்கமாக ஒவ்வொரு பெயரையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். நீங்கள் அப்படி குடும்ப ஆட்சி நடக்கவில்லை என்று சொல்லுங்கள்.
எங்கள் குடும்பத்தில் இருந்து நாங்கள் வாரிசு என்கின்ற காரணத்திற்காக பதவி கொடுக்கவில்லை அல்லது நான் வகித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பதவிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் யார் உழைக்கின்ற தொண்டனாக இருந்தாலும் ஒருநாள் அடைய முடியும் என்பதை வெளிப்படையாக கூறுங்கள். உங்களால் சொல்ல முடியுமா? உங்கள் அமைச்சரவை சகாக்களிலேயே உங்களுடைய மகனாக இருக்கின்ற காரணத்தினால் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அதீதமான முக்கியத்துவம். அந்த முதல் நாற்காலியை உங்கள் குடும்பத்திற்கு சொந்தமானதாக வைத்துக் கொண்டு பாஜகவை குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது'' என்று காட்டமாக விமர்சித்தார்.