Skip to main content

மோடி ஆட்சியில் 2,920 மதக்கலவரங்கள் நடத்தப்பட்டு, 320 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் - கே. பாலகிருஷ்ணன்

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

 

In Modi's regime, 2,920 religious fight were happened and 320 people were killed

 

இவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பரங்கிப்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், இந்தத் தேர்தல் நாடு விடுதலை அடைய தீர்மானிக்கிற தேர்தல்.  அதிகாரத்தை பயன்படுத்தி எதிர் கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். பறக்கும்படை, வருமான வரி சோதனை என மிரட்டி அச்சுறுத்தி முடக்க நினைக்கிறார்கள். தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளது. இப்படி வருமான வரி சோதனை என்ற பெயரில் சோதனை செய்ய யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்டார்.
 

எடப்பாடி, ஓபிஎஸ், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்ய இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்தால் வரும் 3-ம் தேதி கோவையில் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் ஆலோசனை செய்து  தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்தக் கூடிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
 

கோடைக் காலம் என்பதால் எடப்பாடிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது மோடி நல்ல பிரதமர் என்று கூறுகிறார். அவர் தமிழகத்திற்கு என்ன சாதித்தார். எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றவில்லை.
 

சந்தர்பவாத கூட்டணி சேர்ந்துள்ள ராமதாசும் வெய்யிலால் குழம்பிப்போய் எல்லா முதல்வரையும்விட எடப்பாடிதான் சிறந்தவர் என்று கூறுகிறார். அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டை கவர்னரிடம் கொடுத்துவிட்டு தமிழகத்தில் சரியான ஆட்சி நடக்கிறது என்கிறார். அவரது நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்காக துரோகி என்று கூறியவரை தற்போது தியாகி என கூறுகிறார். தூத்துகுடியில் 15 பேரை சுட்டு கொன்றவரை நல்லவர், தியாகி என்பது  நல்ல வியாபாரம் நடந்து முடிந்துள்ளதால் தான் இப்படி பேசி வருகிறார்.  
 

அதிமுக வலுவான கட்சி என்கிறீர்களே ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. இரண்டு ஆண்டுகளாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தாமல் தள்ளிக்கொண்டே செல்கிறீர்களே ஏன் என்று கேட்டார். தேர்தல் நடத்தி இருந்தால் டெபாசிட்கூட கிடைத்திருக்காது. 
 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு எதிர் அலை வீசுகிறது. மற்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பிஜேபி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த பரங்கிப்பேட்டையில் சுனாமியின் போது நூற்றுக்கணக்கான மீனவர்கள் பிணங்களாக கிடந்தார்கள் அவர்களை இங்குள்ள இஸ்லாமிய சமூக மக்கள் அரவணைத்து எடுத்துஅடக்கம் செய்து துக்கத்தில் ஆழ்ந்தார்கள். ஆனால், பி.ஜே.பி.யின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையினரிடையே மோதலை உண்டாக்கி இந்தியாவின் பண்பாடு கலாச்சாரத்தை சீர்குலைய செய்கிறது. தேசத்தின் தந்தை காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்கள். அவர் குறித்து பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள் இது எவ்வளவு கண்டனத்துக்குரியது. மோடியின் ஆட்சியில் 2920 மதக்கலவரங்கள் நடத்தப்பட்டு 320 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.   
 

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த மோடி அரசு விவசாயிகளுக்கு ஒரு பைசாகூட தள்ளுபடி செய்யவில்லை. அவர் அம்பானிக்கும் அதானிக்கும் கைக்கூலியாக செயல்படுகிறார். இந்திய நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுத்த மோடியை கைது சிறையில் அடைக்கவேண்டாமா? மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்த பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோகார்பன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அதன்பின் தற்போதுள்ள நிலையில் பரங்கிப்பேட்டை இருக்காது. டெல்டா மாவட்டங்கள் அழிந்து சுடுகாடாக மாறும். கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து 7 பேர் விடுதலை நடைமுறைப்படுத்துவோம் என்கிறார்கள். இதற்கு முன் யார் ஆட்சியில் இருந்தார்கள்? தமிழ்நாட்டில் கையாலாகாத எடப்பாடி ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று மே 23ஆம் தேதி புதிய சரித்திரமாக மோடி தூக்கி எறியப்படும் செய்தி வரும். அதேபோல் எடப்பாடி ஆட்சியும் அகற்றி தூக்கி எறியப்படும். அரசியல் சாசனத்தையே மிதிக்கிற பேய் ஆட்சியாக மோடி ஆட்சி திகழ்கிறது இது நீடிக்க கூடாது. சாதி மத கலவரங்கள் தூண்டி சாதிய வர்ணம் பூசப்பட்டு பதவி சுகத்தை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிஜேபி அரசு செயல்பட்டது.  தற்போது ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது.
 

 காடுவெட்டி குருவை விஷம் வைத்து கொன்றுவிட்டார்கள் என்று அவரது அம்மா சி.பி.ஐ. விசாரணை கேட்டுள்ளார். ராமதாஸ் சமூகப் பாதுகாப்பிற்காக இல்லை. அவரது குடும்பத்தை பாதுகாக்கவும் அன்புமணியை அமைச்சராக்கவும்தான் பாடுபடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் திருமாவின் மீது சாதிய சாயங்கள் மூலம் அவதூறுகளை பரப்புகிறார்கள். அவர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட தலைவர்., ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல. கடந்த  பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போது எந்த ஒரு அசம்பாவிதமும் இந்த தொகுதியில் நடைபெறவில்லை. ஆகவே ஏழை எளிய மக்களின் கோரிக்கை பாராளுமன்றத்தில் ஒலிக்க அவருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்