
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஜே.சி.ஐ. பாண்டிச்சேரி மெட்ரோ கிளை, வில்லியனூர் வாஞ்சிநாதன் வாலண்டீர் யூத் கிளப், வாசவி கிளப் ஆஃப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி, வனிதா கிளப் ஆஃப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி ஆகிய பொதுநல அமைப்புகள் இணைந்து கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ பாண்டிச்சேரி மெட்ரோ கிளை இயக்கத்தின் தலைவர் புகழேந்தி தலைமை ஏற்க, வில்லியனூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவர்களைக் கவுரவித்துப் பேசினார். அவர் பேசுகையில், "எப்போதும் மருத்துவர்களின் பணி மக்களின் உயிரைக் காக்கக் கூடியதாக இருக்கும். அதுவும் இந்தக் கரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சிறப்பாக பணியாற்றி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
அவர்களின் சேவையால்தான் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. எனவே மருத்துவர்களைக் கவுரவிக்க வேண்டியது ஆட்சியில் உள்ளவர்களின் கடமை. இதை உணர்ந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு தமிழ்நாடு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்து வழங்கியுள்ளார். அத்துடன் கரோனா சிகிச்சையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதைப் புதுச்சேரி மருத்துவர்களுக்கும் அமல்படுத்த திமுக வலியுறுத்தியது. ஆனால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே புதுச்சேரி முதல்வர், மருத்துவர்களைக் கவுரவிக்கும் வகையிலும், அவர்களது தியாகத்தைப் போற்றும் வகையிலும் தமிழ்நாடு முதல்வர் மருத்துவர்களுக்கு அறிவித்த அனைத்துச் சலுகைகளையும் அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஜே.சி.ஐ. நிர்வாகிகள் வெங்கடேசன், சுந்தரவடிவேல், கதிரவன், விநாயகம், சரவணன், ராமன், வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற நிறுவனர் ராமன், தலைவர் முருகன், வாசவி சங்கம் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் விஜயன், திமுக மாநில இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், தொகுதி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் சபரி, மந்திரகுமார், மனோகர், ஹாலித், ஐடி விங் அயூப், மன்சூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.