ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அரசுப் பணிகளில் அப்பட்டமாக கொள்ளையடிப்பதாகவும் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியதோடு அதைப் பட்டியல் போட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனுவாகவும் கொடுத்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளரும் திருப்பூர் தொகுதி எம்.பி.யுமான திருப்பூர் சுப்பராயன்.
இன்று மாலை அவர் தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சியினரோடு ஈரோடு வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது,
"ஈரோடு மாவட்டம் நம்பியூரில் சென்ற ஐந்து ஆண்டுகளாக ஆளும் அ.தி.மு.க.வினர் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தொடர்ச்சியாக மக்கள் விரோதச் செயல்களில் ஈபட்டு வருகிறார்கள். அங்கு கள்ளச்சாரயம் விற்பனையில் தொடங்கிய இந்த ஆதிக்கம், அப்பாவி பொது மக்களைப் பழிவாங்க அநியாயமாகப் பொய் வழக்கும் போடுகிற நிலைக்கு வந்துள்ளார்கள்.
குறிப்பாக நம்பியூர் பகுதியில் வசதி படைத்தவர்களை மிரட்டி, ஆளும் அ.தி.மு.க. கட்சியில் சேர வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். அந்தக் கட்சியில் சேர மறுப்பவர்களின் சொத்துகளைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளையும் செய்கிறார்கள். குப்பிபாளையம் என்ற கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் சமீபத்தில் நடந்திருக்கிறது.
நம்பியூர் பஸ் நிலையம் நல்ல நிலையில் இருந்தது. கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்டிடங்களை இடித்து விட்டு கமிஷனுக்காக ரூபாய் 6 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டி மக்கள் பணத்தை விரயம் செய்துள்ளார்கள். நம்பியூர் பேரூராட்சி, நம்பியூர் ஒன்றியங்கள் மூலம் கொசு மருந்து அடித்ததாக பல கோடி ரூபாய்க்கு பொய்க் கணக்கு எழுதி முறைகேடு செய்துள்ளார்கள்.
செட்டியம்பதி குளத்தில் இருந்து நம்பியூர் பஸ் நிலையம் வழியாகச் செல்லும் பள்ளம், நீர்வழிப்பாதையாகும். அதை அடைத்துவிட்டு சைக்கிள் நிறுத்தம் கட்டியுள்ளார்கள். மழைக்காலத்தில் இந்த ஓடைப்பள்ளம் அடைப்பால் நம்பியூர் பகுதி முழுக்க நீர் சூழ்ந்து அழிவைச் சந்திக்கும் நிலை ஏற்படும். இந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்துக் குளங்களில் இருந்தும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மண் வியாாரிகள் டிப்பர் லாரிகளில் மண் கடத்தி விற்பனை செய்து வருகிறார்கள். இந்தக் கடத்தலை தடுப்பதோடு உள்ளூர் விவசாயிகள் மண் அள்ள அனுமதியும், பாதுகாப்பும் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
அதே போல் நம்பியூர் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் அனுமதி இல்லாத மது விற்பனை நிலையங்கள் ஏராளமாகச் செயல்படுகிறது. நம்பியூர் பகுதியிலேயே போலி மது தயாரித்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் குடிமகன்களில் உடல் மற்றும் உயிருக்கு பேராபத்து ஏற்படும். மேலும், இந்தக் கள்ள மது தயாரிப்பவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தான். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.