அதிமுகவின் தற்போதைய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நடந்த மின் கட்டண உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டில் பேசினார். அப்போது அவர், “ஒரு கிளைக் கழக செயலாளருக்கும் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை” என அதிமுக மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரனை கடுமையாக சாடினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ், “பண்ருட்டி ராமச்சந்திரன் எங்குச் சென்றாலும் அந்தக் கட்சி விளங்காது என கூறுகிறார். முதல்முறையாக நான் 1991ல் சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றம் சென்றபோது, பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு யானையின் மீது அமர்ந்து சட்டமன்றத்திற்கு வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவர் அந்தக் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக ஆனபிறகுதான் அந்தக் கட்சியிலிருந்து 21 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் வரும் அளவுக்கு பெரிய கட்சியாக மாறியது. நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்தியில் அமைச்சர்களாக வருவதற்கு பாமக வளர்ந்தது, அந்தக் கட்சி பிரகாசமாக இருந்ததற்கு காரணம் பண்ருட்டி ராமச்சந்திரன்.
தேமுதிக அவைத்தலைவராக இருந்து அவரின் அரசியல் ஆலோசனையின் காரணமாக திமுகவை விட அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் தேமுதிக இருந்தது. அவர் எங்கு கால்வைத்தாலும் அது வளர்ச்சி தான். காரணம் அவர் யாருக்கும் கொத்தடிமையாக இருந்து பழக்கப்படவில்லை.
அவர் ஜெயலலிதாவுடன் பயணித்தவர், கட்சியில் ஜெயலலிதாவால் அமைப்புச்செயலாளர் பொறுப்பைப் பெற்றவர். ஜெயலலிதாவால் நல்லத் தலைவர் என நேசிக்கப்பட்டவரை நீங்கள் கொச்சைப் படுத்தி பேசுகிறீர்கள்; உங்களுக்கு அவரை பேச தகுதி இருக்கிறதா என ஒரு முறை யோசித்து பார்க்கவேண்டும்.
அவர் அரசியலுக்கு வரும்போது நீங்கள் ஆஃப் டவுசர் போட்டுக்கொண்டு பள்ளிக்கு சென்றிருப்பீர்கள். அவர் 1967ல் எம்.எல்.ஏ. 1972ல் அமைச்சர். 1972ல் நீங்கள் அதிமுகவிலும் கிடையாது, அரசியல்வாதியும் கிடையாது.
அதிமுகவில் நீங்கள் என்று குறுக்குவழியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டீர்களோ அன்றிலிருந்து அதிமுக நான்காக உடைந்துவிட்டது. இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியின் கட்சி விரோத நடவடிக்கைதான். யாரையும் நேசிக்காமல், யாருடனும் பழகாமல், தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமான நடவடிக்கையால் கட்சி நான்கு அணிகளாக உள்ளது.
அவருடன் இருப்போர் எல்லாம் கொடநாடு வழக்கு தீர்ப்பு வரும்போது, அதன் குற்றவாளி யாரென மக்களுக்கு தெரிகின்ற போது விரட்டி அடிப்பார்கள். அதிமுக ஒன்றாக இணையும். ஒரு கட்சியாக செயல்படும். ஓ.பி.எஸ். தலைமை தாங்கி செயல்படுத்துவார்.
கட்சி மூத்தத் தலைவர்களை இழிவாக பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உங்களின் ஆரம்பக்கட்டத்தில் கட்சிக்குவருவதற்கு முன்பு நீங்கள் செய்த தவறுகள் முதல் இதுவரை நீங்கள் செய்துள்ள தவறுகள் வரை பட்டியிலிட்டு சொல்ல வேண்டியது வரும்” என்று தெரிவித்தார்.