தீபாவளிக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மது விற்பனை 431 கோடி எனச் செய்திகள் வெளிவருகின்றன. கடந்த ஆண்டை விட விற்பனை 34 கோடி குறைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனர் மூ.ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளதாவது,
'உண்மையை நாம் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த வாரம் விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகி புரம் என்ற இடத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விலைக்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வு மேற்கொண்டதில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும், இன்னொரு கடையில் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 485 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இருப்பு குறைவாக உள்ளது என்பது எவ்வளவு பெரிய ஊழல்.
இரண்டு கடைகளில் 7லட்சம் ரூபாய் மது பாட்டில்களின் இருப்பு குறைவாக இருக்குமேயானால் 5300 கடைகளில் எத்தனை கோடான கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் இருப்பு குறைவாக இருக்கும் .எனவே இந்த விற்பனை என்பது பாதி அளவுக்கு மேல் கள்ளத்தனமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை தீபாவளி விற்பனை வரும் வரையில்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பாக நான் போட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கணினி முறையில் ரசீது வழங்கப்படவேண்டும், விலைப்பட்டியல் வெளியில் வைக்கவேண்டும் என்றும் ,அனைத்து கணக்குகளையும் கணினியில் சேமித்து வைக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது .இந்த தீர்ப்பினை மதிக்காமல் எல்லா கடைகளிலும் மதுபாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பணம் வசூலிக்கப்படுகிறது.
கள்ள வருமானம் அதிகமாக இருக்கும் துறையாக டாஸ்மாக் இயங்கி வருகிறது.அரசுக்கு வருமானம் வருகிறது என்பதை விட ஆளுங்கட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் வருமானமும் அதிகாரிகளின் வருமானமும் உயர்ந்து வருகிறது. மதுவினால் பல உயிரிழப்புகளும்,பல குடும்பங்கள் நிம்மதியையும் இழந்து வருகின்றன.
மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த முதலில் கள்ள வருமானத்தை தடுக்க அரசு முற்பட வேண்டும்'என தெரிவித்துள்ளார்.