கரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் மிதமிஞ்சிய கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் பலர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்ரமணியம், டி. பெர்டினென்ட் மற்றும் கே. எம். ஆசிம் செஹ்ஜாட் அகில் பன்சாலி, எம். மீரா, ஆதித்ய முகர்ஜி மற்றும் எஸ். வேதவேல் ஆகியோர் உள்ளிட்ட பி.எப்.எஸ். சட்ட நிறுவனம் இந்த வழக்கை த.மு.மு.க. அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநரும் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
1. நோய்க்கான மருத்துவச் செலவு/கட்டணத்தை வரைமுறைப் படுத்தவும், (தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில்)
2. பெருந்தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் பொதுச் சுகாதாரத் துறை எதிர் கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு அதற்கு உதவும் வகையில் தனியார் மருத்துவமனைகள் தார்மீக அடிப்படையில் தங்களிடம் உள்ள இட வசதியை ஒதுக்கித் தருமாறும்,
3. மருத்துவ ஆய்வுக் கூடங்கள் சட்டத்தின்படி, COVID 19 நோய்க்கான சிகிச்சையில் குறைந்தபட்ச தர நிர்ணயத்தை விதிக்குமாறும் மேற்கூறிய கோரிக்கைகளுக்கு உரிய வழிகாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும், வேண்டி இந்தப் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பொது நல வழக்கின் விபரம்:
கரோனா என்னும் கோவிட் 19 நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்வதில் தொடங்கி முழு சிகிச்சை அளிப்பது வரை லட்சக்கணக்கில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகள் தங்கள் மனோ இச்சையின் படி கட்டுக்கடங்காத, மிகைப்படுத்தப்பட்ட, செயற்கையாக உயர்த்தப்பட்ட கட்டணங்கள் வசூலிப்பதாகவும் செய்தித் தாள்களிலும், கள விசாரணையிலும் த.மு.மு.க. அறிந்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து கரோனா நோய் சிகிச்சைக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) வழங்கப்படாததால் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன. நிலையான கட்டணமோ அல்லது சிகிச்சை அடுக்கு முறையோ இல்லை. அதிகப் பணம் தருவோருக்குச் சிகிச்சை அளிப்பதும், மற்றவர்களைத் திருப்பி அனுப்பும் செயலையும் தனியார் மருத்துவமனைகள் செய்கின்றன.
ஆனால் இந்நோயோ குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால் அனைவருக்கும் தொற்றிக் கொண்டுவிடுகிறது. ஒருவருக்கே லட்சக்கணக்கில் மருத்துவச் செலவு என்றால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆகும் செலவை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அநியாயமாக வசூலிக்கப்படும் இத்தொகை பேராபத்தாகவும் இருக்கிறது.
எனவே உடனடியாக அரசின் தலையீடு அவசியமாகிறது. நாட்டிலேயே மராட்டியத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் COVID 19 நோயாளிகள் உள்ளனர். எனவே இந்த அவசர நிலையில் உடனடியாக அரசு தலையிட்டு தனியார் மருத்துவமனைகளின் அதிக கட்டண வசூலுக்கு எதிராக உரிய நெறிமுறைகளை வரைமுறை செய்ய வேண்டும். அப்பொழுது தான் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் குணம் பெற முடியும்.
போதிய பணம் இல்லை என்ற காரணத்தால் பொதுமக்களுக்குச் சிகிச்சை மறுக்கப்படுவது என்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் எடுத்தும் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது தனியார் மருத்துவத் துறையின் கடமையாகும்.
மேலும் இதுபோன்ற ஒரு பெரு நோய்த் தொற்று சமயங்களில் அரசின் பொதுச் சுகாதாரத் துறைக்கு தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து உதவ வேண்டியது தனியார் மருத்துவத் துறையின் மீது உள்ள காலத்தின் கட்டாய கடமையாகும்.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குஜராத் உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனை கட்டணங்கள் தொடர்பாக வழிகாட்டு உத்தரவுகளை வழங்கி உள்ளது. மராட்டிய அரசும் இது தொடர்பான ஒழுங்கு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அத்தகைய விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் அரசு பொது மருத்துவமனைகள் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுக்காகப் பள்ளி, கல்லூரிகளைத் தேடி அரசு ஓடுகின்றது.
எனவே பெருந்தொற்று நோய்கள் சட்டம் 1897, மற்றும் இயற்கைப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும் 1MC இந்திய மருத்துவக் கழகம் ஒழுங்கு விதிமுறைகள் 2002, மருத்துவமனைகள் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2010 மூலம் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க உத்தரவிடக் கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் வேண்டுதல்:
1. தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள்/ பல்நோக்கு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் குறைந்த பட்சம் 50 விழுக்காடு கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு ஒதுக்க அரசு உரிய அறிவிக்கையை வெளியிட இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும்.
2. மேற்கூறிய மருத்துவ மனைகளில் படுக்கை எண்ணிக்கை கிடைக்கும் நிலைகுறித்து கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுக் குறைந்தது வாரம் ஒரு முறை பொது மக்களுக்கு அது அறிக்கை வெளியிட வேண்டும்.
3. மேலும் COVID 19 நோய் சிகிச்சைக்கான கட்டணத் தொகையை ஒழுங்குமுறைப் படுத்தும் அறிவிக்கையை வெளியிட வேண்டும். அதில் சிகிச்சை கட்டணம் குறித்த தலைப்பு வாரியாக விரிவான கட்டணத் தொகை விளக்கப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். மேலும் நோய் சிகிச்சைக்கான குறைந்த பட்ச தர நிர்ணயமும் வெளியிடப்பட வேண்டும். இவ்வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் அப்ரார் அஹ்மது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.