Skip to main content

கரோனா செயல்பாடுகள்! ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளிடையே மோதல்! சிறப்பு அதிகாரி நியமனம்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

Corona


சென்னையில் கரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதன் ருத்தரதாண்டவம் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.சின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில உத்தரவுகளைப் பிறப்பிக்க, கரோனா மண்டலங்களை மேற்பார்வையிட்டு நுண்ணிய ரிப்போர்ட்டுகளைத் தருவதற்காகப் புதிதாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். 
 


சென்னையின் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.சின் செயல்பாடுகள் திருப்தியளிக்காத நிலையில்தான், சென்னையில் கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக முன்னாள் சுகாதாரத் துறை செக்ரட்டரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை நியமித்தது அரசு. ராதாகிருஷ்ணன் எடுக்கும் தீவிர நடவடிக்கைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. இதனால் பல நடவடிக்கைகளில் முரண்பட்ட தகவல்கள் மக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, பிரகாஷின் அறிவிப்புகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கும் இடையூறாக இருந்தன. 
                      
கரோனா நெருக்கடியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையே நடக்கும் ஒருங்கிணைப்பு இல்லாத போக்குகள் குறித்து முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் இது குறித்து எடப்பாடி பழனிசாமி விவாதித்தார். இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷை தொடர்பு கொண்டு கடிந்துகொண்டார். மேலும், இது குறித்து விளக்கமளிக்குமாறு கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
 

 

                      
இதனையடுத்து ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, ’’கரோனா உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது தொடரும். தனிமைப்படுத்தபடுதலை கடைப்பிடிக்காதவர்கள் அரசின் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்‘’ என்று அறிவித்தார். அதிகாரிகளுடன் ஒற்றுமையில்லாதததும் ஒருங்கிணைப்பு இல்லாததும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே தெரியத்துவங்கியிருக்கிறது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
       
இந்த நிலையில், சென்னையில் கரோனா பரவல் தீவிரம் அடைந்து கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் சிறப்புத் திட்டங்கள் வகுத்து அதனைச் செயல்படுத்த தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 
 

http://onelink.to/nknapp

                   
சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், திரு,வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் கரோனாவை கட்டுப்படுத்த நுண்ணிய அளவிலான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவே சிறப்பு அதிகாரியாக பங்கஜ்குமார் பன்சால் நியமிக்கப்பட்டிருக்கிறார். தினமும் தலைமைச் செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்