தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கோவிந்தராசு. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கரோனா அறிகுறிகள் இருப்பதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி, மற்றும் உதவியாளரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 60 பேருக்கு பரிசோதனை செய்து அதில் எம்.எல்.ஏ.வின் நிதி நிறுவன தொழில் பார்ட்னர் நீலகண்டன் உட்பட சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பட்டுக்கோட்டையில் உள்ள குடிசைமாற்று வாரியத்தில் இயங்கும் கரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு நீலகண்டனுக்கு சர்க்கரை அதிகரிக்க சுயநினைவு இழக்கும் நிலையில் உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக ஆம்புலன்சில் ஏற்றி சென்று மருத்துவக்கல்லூரிக்கு செல்லாமல் தஞ்சை வல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு தனி அறையில் தங்க வைக்கப்பட்டவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் மறுநாள் மீட்கப்பட்டார். அதன் பிறகு தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்ற ஒரே நாளில் உயிரிழந்துள்ளார். இவர் கரோனா பாதிப்பால் இறக்கவில்லை. காலத்தோடு சர்க்கரை நோய்க்கும் சேர்த்து சிகிச்சை கொடுத்திருந்தால் ஒருவரை இழந்திருக்க மாட்டோம் என்கிறார்கள் உறவினர்கள்.