விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை சந்தித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கலந்துரையாடினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “ 9 வாரங்களாக மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு உரிய சம்பளத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கவில்லை. ஆனால், டெல்லியில் இருந்து வந்து தமிழகத்தை தூய்மை செய்வது போல் நாடகமாடி வருகிறார். காவிரி பிரச்சனையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தரும்.
தங்களுடைய அரசியல் லாபத்திற்காக கர்நாடகா அரசை திசை திருப்ப வேண்டும் என பா.ஜ.க கர்நாடகாவில் கலவரத்தை தூண்டி விடுகிறது. தேசிய கட்சிகளை முன்னுக்கு பின் முரணாக பேசி வருவது சீமானின் வேலையாக இருக்கிறது. சீமான், பா.ஜ.க,வின் மத அடிப்படையிலான கோட்பாடுகளை மறைமுகமாக அரசியலில் கொண்டு வருகிறார். சீமான் போன்றவர்களை தமிழக மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை.
கர்நாடகா காங்கிரஸ் அரசு, நதிநீர் ஆணையம் கூற்றுப்படி ஒரு நாள் கூட நிறுத்தாமல் கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறது. அதை சீமான் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் இருந்து அரசியல் பேசும் சீமான் எப்போது காவிரியைப் பார்த்தார்? காவிரி பிரச்சனையை அரசியலாக்குவது பா.ஜ.க தான்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க இடையிலான கூட்டணி முறிவு இறுதியானது அல்ல. மோடியை பிரதமராக வரவிட மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது அ.தி.மு.க.வினருக்கோ சொல்ல தைரியம் இல்லை. இன்னும் பின் வழியாக சென்று மோடியிடம் மலர் செண்டு கொடுத்து தான் வருகின்றனர். அதனால், இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்” என்று கூறினார்.