அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இணைந்துள்ளது. மேலும் இந்த அணியில் தேமுதிகவை இணைக்க பாஜக பெரும் முயற்சி எடுத்தது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது திமுக. இந்த கூட்டணியில் பாமகவை இணைக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் தேமுதிகவை இணைத்தால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது.
இதையடுத்து விஜயகாந்த்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது பிரேமலதா, சுதீஷ் மற்றும் தேமுதிகவின் முன்னணி நிர்வாகிகள் இருந்துள்ளனர். இந்த சந்திப்பின்போது விஜயகாந்த்துடன் அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும், நாட்டு நலன் கருதி நல்ல முடிவை எடுக்குமாறு விஜயகாந்த்திடம் கூறியதாவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய தலைமைகள் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது. ஆகையால் தேமுதிகவின் முடிவு ஓரிரு நாளில் தெரிய வரும் என்று அரசியல் களத்தில் விவாதங்கள் நடந்து வருகிறது.