ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்வர் ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், “அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம். கமலை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டுள்ளோம். முதல்வர் மீது தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அது எங்களுக்கு வெற்றியை தேடி தரும். தொகுதியை எங்களுக்கு ஒதுக்கி தந்த திமுகவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக பிரச்சாரத்தை தொடங்கவுள்ளேன். முதல்வரும் பிரச்சாரத்திற்கு வரவேண்டும் என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக அவரும் வருவார் என்று முழு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் மேலிடம் நான் தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லியதையடுத்து நான் போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.