கடந்த மே மாதம் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடகத் தேர்தல் முடிவானது காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் எடுத்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஜபல்பூரில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் மத்தியப்பிரதேச மக்களுக்கு 6 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
பிரியங்கா காந்தி இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், "பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும், 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், மேலும் 200 யூனிட் வரை மின்சாரத்தின் கட்டணம் பாதியாக குறைக்கப்படும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி" என அறிவித்துள்ளார். பிரியங்கா காந்தியின் இந்த அறிவிப்பு மத்தியப்பிரதேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.