
புதுமைபெண் திட்டத்தின் மூலம், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்ந்த பிறகு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு இனி ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த விழாவில் உள்ள மாணவிகளைப் பார்த்து திராவிடியன் ஸ்டாக்காக பெருமைப்படுகிறேன். இதற்கு நேர் எதிராக பெண்கள் வளர்ச்சி பிடிக்காமல் வன்மம் பிடித்த ஸ்டாக் ஒன்று உள்ளது. பெண்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றும், கடைசி வரை ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தில் இருக்கிற இந்த காலத்திலும் பேசிக் கொண்டு இருக்கிற எக்ஸ்பயரியான ஸ்டாக். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து, இன்றைக்கு தமிழ்நாட்டு பெண்கள் இந்தியாவிலேயே டாப். மார்க் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப்பாக இருக்கிறார்கள். நாட்டிலேயே உயர்கல்வி சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள் தான் டாப். உயர்கல்வியை முடித்து வேலைக்கு செல்பவர்களில் தமிழ்நாட்டு பெண்கள், இந்தியாவிலேயெ டாப். இது தான் பெரியார் கண்ட காட்சி. ஒவ்வொரு வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள், உயர்கல்வியை படித்து நல்ல வேலையில் சேர்ந்து யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய சொந்த பொருளாதாரத்தை வளத்தோடு இருக்க வேண்டும் என்று கருதியவர் தந்தை பெரியார்.
கல்வியை பொறுத்தவரையில் பெண்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள். ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்பு சமூக ரீதியாகவும், பாலின ரீதியாகவும் படிப்புக்கு தடைக்கற்கள் இருந்தது. 1911ஆம் ஆண்டு எழுத்தறிவு பெறாதவர்களுடைய எண்ணிக்கை 94 சதவீதம்; 1921இல் 92 விழுக்காடு. அன்றைய காலத்தில் இந்திய பெண்களில் 2 பேருக்கு மட்டும் தான் எழுதவோ, படிக்கவோ தெரியும். பெண்களைப் படிக்க வைத்தால், பண்பாட்டை இழந்துவிடுவோம் என்ற மூடத்தனமும், பிற்போக்குத்தனமும் அன்றைய காலத்தில் இருந்தது. அதை மாற்றி, படித்தால் அறிவு, தன்னம்பிக்கை வரும் என்பதை புரியவைத்து கல்வி கனவை எல்லோருக்கும் திறந்து வைத்த ஆட்சி நீதி கட்சி ஆட்சி. இந்தியாவிலேயே நீதிக் கட்சி ஆட்சியில் தான் அனைவருக்கும் கல்வி என்பதை சட்டமாக்கப்பட்டது.
வந்த பாதையை மறக்காமல் இருந்தால் தான் வழி தவறாமல் முன்னேறி போகிட முடியும். இதெல்லாம் தெரியாமல் இருப்பதினால் தான் என்ன செய்தது திராவிடம்? என்று சிலர் அறியாமையில் கேட்கிறார்கள். கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகள் நீதிக்கட்சி ஆட்சியில் தான் எடுக்கப்பட்டது. அடுத்து வந்த காமராஜர் ஆட்சியில், அதிகப்படியான பள்ளிகள் திறக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா எடுத்த அரசியல் புரட்சியினால், அடுத்தடுத்து வந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. அண்ண மறைந்த பிறகு, கலைஞர் கல்லூரி கல்வியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தினார். அந்த வரிசையில், கல்லூரி கல்விக்கும், உயர்கல்விக்கும், ஆராய்ச்சி கல்விக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பெண்களுக்கு நேரடியாக பணத்தை சேர்த்து அவர்களுக்கான சமூக விடுதலையையும், பொருளாதார விடுதலையையும் உறுதி செய்கிறோம்.
மகளிருக்கு பல்வேறு திட்டங்களைத் திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ளது. பணமில்லாமல் படிப்பை நிறுத்திய பல்லாயிர மாணவிகள் கல்லூரிகளை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். உங்களுக்கு படிப்புக்கு மட்டுமல்ல எந்த தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன். முந்தைய ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் நிதி நெருக்கடி ஒரு பக்கம், ஒத்துழைப்பு தராத ஒன்றிய அரசு ஒரு பக்கம் என சிக்கல்கள் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கினோம். ஒரு ஆண், கல்லூரிக்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி; ஆனால் ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி. அந்த வகையில், புதுமை பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வி முடிக்கும் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். திறமைசாலிகள் அதிகமாவார்கள். அதன் காரணமாக, உலக முன்னணி நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழ்நாட்டை நோக்கு வருவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணம் குறையும், பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். உயர்கல்வி பெறாத பெண்கள் தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் வரை நான் ஓயமாட்டேன். நான் மட்டுமல்ல, நான் ஏற்றிருக்கும் தலைவர்களும் அவர்களுடைய கொள்கைகள் தான். புதுமை பெண்களே, படிங்க, படிங்க, படிங்க படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்திட நான் இருக்கிறேன். நம்முடைய அரசு இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும், வீட்டில் முடங்கிடாமல் வேலைக்கு சென்று பணியாற்றுங்கள்” என்று பேசினார்.