தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட திட்ட பணிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு அழைப்பு மறுப்புக்கப்பட்டது. மனு அளிக்க சென்றவரை காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் தருமபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் நடைபெற்றது.
அப்போது தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாருக்கு இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்காததால் தானாக முன்வந்து தமிழக முதல்வரை சந்தித்து தர்மபுரி மாவட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தார். அப்போது தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் காரை வழிமறித்து சாலையிலேயே நிறுத்தி உங்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்து, கரோனா இல்லையென சான்றிதழ் இருந்தால் தங்களுக்கு அனுமதி வழங்குகிறோம் என தெரிவித்தனர்.
அதற்கு, தர்மபுரி மாவட்டத்தில் தும்பல அள்ளி, என்னேகோல் புதூர் அணைக்கட்டு திட்டம், ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் என கோரிக்கைகள் பல வருடங்களாக நிலுவையில் உள்ளதாகவும், இதுதொடர்பாக தான், தாமாக முன்வந்து மனுவாக அளிக்க உள்ளேன், அதற்குதான் வந்தேன் எனவும் தெரிவித்தார். ஆனால் காவல்துறை அனுமதி அளிக்காததால் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையும் மீறி காவல் துறையினரியின் தடுப்பை மீறி விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல முயன்றார். அப்போது காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினார். இதனால் சுமார் 30 நிமிடம் தர்மபுரி - சேலம் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.