
சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுநருக்கும் திமுக அரசிற்குமான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வந்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்த நிலையில், பேரவையில் அங்கமாக விளங்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதையடுத்து, தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் கலந்து கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் ஆளுநர் குறித்து, “ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்த நீங்கள் அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கெள்ளலாமா? இது பின்வாங்கல் இல்லையா?” என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
அதில், “ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம். அத்தீர்மானம் ஏற்கப்பட்டு அவையின் மாண்பும் மக்களாட்சித் தத்துவமும் நிலைநாட்டப்பட்டது.” என்று பதிலளித்தார்.
மேலும் அவர், “சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப் பதிலளித்து நான் பேசியபோது, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன்’ என்று குறிப்பிட்டேன், அதைத்தான் இப்போதும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன். எனவே, குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு. குடியரசு நாளன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை!.” எனக் கூறினார்.