தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கலைஞரின் திருவுருவப் படத்தை சட்டப்பேரவையில் நேற்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் தமிழக எதிர்க்கட்சியான அதிமுக இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்தது.
அதிமுக, கலைஞர் படத்திறப்பு விழாவைப் புறக்கணித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறக்கும்போது திமுக அந்நிகழ்வைப் புறக்கணித்ததுதான் தங்களது தற்போதைய புறக்கணிப்புக்கும் காரணம்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், ''நானே எடப்பாடியாரை தொடர்புகொண்டேன். அப்பொழுது அவரிடம் சொன்னேன். சார் நீங்க வரணும்னு முதல்வர் ஆசைப்படுறார். நாங்களும் விரும்புகிறோம். இந்த விழாவில் நீங்கள் கலந்துகொள்வது மட்டுமல்ல அந்த விழாவில் சரிசமமாக உட்கார்ந்து இந்த விழா குறித்து வாழ்த்துரை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே நீங்கள் தப்பாமல் வரவேண்டும் என உங்கள் அனுமதியைக் கோருகிறோம் என்று சொன்னேன். அதற்கு அவர், நான் காரிலே சேலத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன். நான் போய்ச் சேர்ந்த பிறகு யோசித்துச் சொல்கிறேன் என்றார். விழாவிற்கு வாருங்கள் என்று கேட்டவன் நான். ஆனால் விழாவுக்கு வரவில்லை என்று என்னிடமே சொல்லவில்லை. ஆனால் சட்டசபை செக்ரட்டரி மூலம் இந்த விழாவிற்கு அதிமுக வராது என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா படம் திறக்கப்படும்போது எங்களிடம் சொல்லவில்லை. நீங்கள் இந்த விழாவிற்கு வாங்க என்றுகூடக் கூப்பிடவில்லை. பத்தோடு பதினொன்னாக ஒரு இன்விடேஷன் அனுப்பினாங்க. எதிர்க்கட்சியாக இருந்த எங்களை முறையாக அழைக்கவில்லை என்பதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லையே தவிர வேறு காரணமும் இல்லை''என்றார்.