முதலமைச்சரும், அதிமுகவும் வேளாளர் அறிவிப்பின் எதிர்ப்பையும், பாதிப்பையும் வெகு சீக்கிரமாக உணர்வார்கள் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழு பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பரிந்துரையைச் செய்வதாக அறிவித்து முதலமைச்சர் அவசரப்பட்டுவிட்டார். சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினர்களோடும் ஆலோசித்திருக்க வேண்டும். இந்தக் கோரிக்கை என்பது பல ஆண்டுகளாகத் தமிழகத்திலே வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னால் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த தலைவர்கள் பிரச்சனையினுடைய ஆழத்தை அறிந்து, இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் இருந்தார்கள்.
இதைப் பற்றி, முழு விவரம் அறிந்த முதலமைச்சர் திடீரென்று பின் விளைவுகளை யோசிக்காமல் இந்த அறிவிப்பைச் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. பல சமுதாயங்களின் எதிர்ப்பையும் மீறி அறிவித்த அ.தி.மு.க அரசு வருகின்ற காலத்தில் இதனுடைய பாதிப்பை உணரும்" எனக் கூறியுள்ளார்.