Published on 25/05/2019 | Edited on 25/05/2019
நடந்து முடிந்த 17ஆவது மக்களவையின் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில், மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களை கைப்பற்றியது.அதிமுக கூட்டணியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் பாஜக மேலிடம் தமிழகத்தில் இருந்து ஸ்டார் வேட்பாளர்களில் ஒருவரை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.மேலும் குமரியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக தலைமையிடம் இருந்து டெல்லி வர அழைப்பு விடுக்கப்பட்டதால் அவருக்கு எம்.பி சீட்டும், மத்திய அமைச்சர் பதவியும் தர இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு பாஜக எம்.பி மற்றும் அமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.