Skip to main content

''கடற்படையின் விளக்கம் ஏற்க முடியாதது... இழப்பீடாக 25 லட்சம் வழங்க வேண்டும்''-ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

pmk

 

மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் படகில் கோடியக்கரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் வீரவேல் என்ற மீனவர் காயமடைந்தார். தற்போது அவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வரும் நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிகழ்விற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீண்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது.  

 

காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய - மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். பதற்றம் நிறைந்த இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீனவர்களின் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கடற்படைக்கு பயிற்சியளிக்க வேண்டும். இந்திய கடற்படை அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

'மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது.  கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர். அதனால் ஏதேனும் ரோந்து படகு வந்தாலே அவர்கள் அச்சத்தில் படகை விரைவாக செலுத்தும் நிலைதான் உள்ளது. இதை புரிந்து கடற்படையினர் செயல்பட்டிருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்