மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பார்த்தா சட்டர்ஜி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 கோடி கைப்பற்றப்பட்டது. இதன்பின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிபன் கிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து ஜிபன் கிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிஆர்பிஎஃப் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட அவர் கொல்கத்தாவில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜிபர் கிருஷ்ணா தனது இரண்டு செல்போன்களை வீட்டை ஒட்டி இருந்த குளத்தில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து குளத்தை சோதனை செய்து அவரது ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது. மற்றொன்றை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து விவரங்களைச் சேகரிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.