இன்று சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றிப் பேசுகையில், ''திமுக எதிலேயும் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்காது. எடுத்துவிட்டால் அதிலேயே உறுதியாக நிற்கும். இந்த தீர்மானத்தினுடைய மையக்கருத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இதற்கான குரலை எதிரொலித்தார்கள். அதுமட்டுமல்ல சட்டமன்றத்தில் இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அன்றைக்கு நம்முடைய முதல்வர் 2020 ஜனவரி ஒரு தீர்மானத்தைக் கொடுத்தார். அந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவில்லை. உடனே பிப்ரவரி 7ஆம் தேதி 'நான் ஒரு தீர்மானம் கொடுத்திருக்கிறேனே அது என்ன ஆச்சு' என்று கேட்டார். அன்னைக்கு இருந்த சபாநாயகர் ஆய்வில் இருக்கிறது என்று சொன்னார் .ஒரு சில தினங்களுக்குப் பிறகு நான் எழுந்து என்னாயிற்று என்று கேட்டேன். ஆய்வில் இருக்கிறது என்று சொன்னார். ஆய்வில் இருக்கிறதா அல்லது ஆராய்ச்சியே கிடையாதா எனக் கேலி பேசி விட்டு விட்டு விட்டோம்.
பிறகு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஒரு முடிவோடு எழுந்து, எடுத்துக் கொள்கிறீர்களா இல்லையா என்று மிகப்பெரும் வாதத்தைச் செய்து பார்த்தோம். அன்றைக்கும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசை எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் நம்முடைய கொள்கை வற்புறுத்துவது என்பது வேறு. அதைத் தான் கலைஞர் அழகாகச் சொன்னார். 'உரிமைக்குக் குரல் கொடுப்போம்; உறவுக்குக் கைகொடுப்போம்' நாங்கள் மத்திய சர்க்காரை எதிர்த்துத் தடி தூக்கிக்கொண்டு எதிர்க்கிறோம். இல்லை, ஆனால் எதை எதை ஏற்கிறோமோ அதை அதை ஏற்கிறோம். எதை எதை எதிர்க்கிறோமோ எதிர்க்கிறோம் கலைஞருடைய பாணியில். இது செக்யூலர் ஸ்டேட் என்று சொல்கிறீர்கள். ஒரு கம்யூனல் ஆர்மி என்று சொல்கிறீர்கள். அரசியல் சட்டத்திற்குக் குடியுரிமை சட்டம் நேர்மாறாக இருக்கிறது. இப்படி ஒரு அரசியல் சட்டத்தினுடைய கருத்துக்கு மீறி எந்த சட்டமும் இருக்கக் கூடாது அது தான் இந்தியாவின் சட்டமே. இது சிறுபான்மை சமுதாயத்தைப் பாதிக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பதைப் போல், நீ மட்டும் உள்ளே வா நீ வராதே என்று சொல்வது கடைந்தெடுத்த மதவெறிக்குச் சமம். ஆகையால் தான் இந்த திட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியாக இருக்கிற பொழுதும் இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தோம். தேர்தல் அறிக்கையிலும் விடாமல் இந்த கொள்கையை வற்புறுத்தினோம் . ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் நிமிர்ந்து கம்பீரத்தோடு அந்த தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம்'' என்றார்.