ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வந்திருந்த பொது மக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர்.
அதில் காஞ்சிகோவில் கிராமத்தையடுத்த தங்கமேடு காலனியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி சீருடையில் அவர்களது பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "நாங்கள் காஞ்சி கோயில் அருகே உள்ள தங்கமேடு காலனி பகுதியில் குடியிருந்து வருகிறோம். அங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கவுந்தப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். எங்கள் பகுதியில் சாலைகள் இருந்தும் இதுவரை பஸ் வசதி இல்லை. இதனால் குழந்தைகள் தினமும் பள்ளி செல்வதற்காக இரண்டரை கிலோமீட்டர் நடந்து சென்று அய்யன் வலசு பிரிவு என்ற இடத்திற்குப் போய் பஸ்ஸில் ஏறி கவுந்தப்பாடி செல்கின்றனர்.
எங்கள் பகுதிக்கு வாரம் ஒருமுறை தான் மினி பஸ்ஸும் ஒரு அரசு பஸ்சஸூம் வருகிறது. அதனால் எங்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை. பேருந்து இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதே போன்று கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என எல்லோரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தினமும் காலை மற்றும் மாலையில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்ட கலெக்டர் கதிரவன் உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரியை அழைத்து உடனே இவர்கள் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரி மாணவர்களின் பெற்றோர்களிடம் விவரங்களை பெற்றதோடு நீங்கள் சொல்லும் பகுதியில் பஸ் வசதி செய்து தரப்படும் என்று உறுதி கூறினார். இதையடுத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கலெக்டர் கதிரவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.