நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்கியதிலிருந்து ஆளுங்கட்சி எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியும், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும் வருகின்றனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதானி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கான கோரிக்கையை எதிர்க்கட்சிகள் திரும்ப பெற்றால் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கோரும் கோரிக்கையை கைவிடுவதாக ஒன்றிய அரசு தரப்பில் யோசனை சொல்லப்பட்டது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை. அதானி முறைகேடு என்பது நடந்த ஒன்று. ஆனால் ராகுல் காந்தி விவகாரத்தில் பாஜக மன்னிப்பு கோருவது ஆதாரமற்றது. இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. எனவே பேரம் பேசும் எதற்கும் நாங்கள் தயாராக இல்லை. மேலும் மக்களவை விதி 357-ன் படி பேச அனுமதிக்குமாறு சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். இது அவரின் ஜனநாயக உரிமை. ஆனால் சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.
ஆளும் கட்சியினர் ராகுல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது அதானி விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை தான். நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டினால் மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும். மூத்த அமைச்சர்கள் ராகுல் காந்தி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுக்க அனுமதியுங்கள். அதன் பின்னர் நாடாளுமன்றம் செயல்படும். இந்த பட்ஜெட் தொடர் முழுவதும் முடங்குவதும், முடங்காமல் இருப்பதும் அரசின் கையில்தான் இருக்கிறது. ஆளும் கட்சியினர் பேச விரும்புகிறார்கள். ஆனால் ராகுலை பேச அனுமதிக்காமல் நாங்கள் பேச தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.