நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.
இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.