கர்நாடகா சட்டமேலவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பட்ஜெட் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா பதிலளித்துப் பேசினார்.
அதில் அவர், “கர்நாடகா மாநிலம் அனைத்து சாதி, மதம், மொழி, இன மக்கள் கூடி வாழும் அமைதிப் பூங்காவாக இருக்கும். மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க வேண்டும். மனிதர்களிடம் மனித நேயம் வளர வேண்டும் என்பதைத் தான் அனைத்து மத நூல்களும் போதிக்கிறது. ஆனால், மனிதர்களுக்கு இடையே வேற்றுமையை உருவாக்குவது, மதங்கள் இடையே மோதல் போக்கை உருவாக்குவது, வகுப்பு கலவரம் தூண்டுவது போன்றவற்றைச் செய்தால் மனிதநேய செயலாகுமா?
அதனால், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் நமது ஜனநாயகக் கட்டமைப்பு அமைந்துள்ளது. அதைத் தான் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஏதோ ஒரு சாதி, மதங்களுக்கு மட்டும் ஆதரவாக இல்லாமல் அனைத்து வகுப்பினரையும் அன்புடன் நேசிக்கும் குணத்தைக் கொண்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல், நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டும் தான் தலை வணங்குவோமே தவிர வேறு எதற்கும் தலை வணங்கமாட்டோம். நாங்கள் தான் பாரத தாயின் மக்கள் என்று சொன்னவர்களுக்கு கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.
காலம் எப்போதும் ஒரே மாதிரி சுழன்று கொண்டிருக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க கட்சியைக் காப்பாற்ற பிரதமர் மோடி எடுத்த அத்தனை முயற்சிகளையும் மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் முறியடித்து விட்டார்கள். பா.ஜ.க.வுக்கான தோல்வி அத்தியாயம் கர்நாடகா மாநிலத்திலிருந்து தொடங்கிருக்கிறது. அதனால், இனி வரும் அத்தனை தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு தோல்வியை மட்டும் தான் மக்கள் பரிசாக கொடுப்பார்கள். இனிமேல் பிரதமர் மோடியின் மாயாஜால பேச்சுக்கள், செயல்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை” என்று கூறினார்.