Published on 24/07/2019 | Edited on 24/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், தென் மாநிலங்களில் போதிய வரவேற்பு டைக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்தது. இதனால் தேர்தலுக்கு பின்பு தென் தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க பல்வேறு பணிகளை பாஜக தலைமை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் முதல் நடவடிக்கையாக கர்நாடகாவில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து நம்பிக்கையில்லை தீர்மானத்தின் போது நேற்று வெற்றி பெற்றது. பாஜகவை வலுப்படுத்த நாடு முழுவதும் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதற்க்கான பொறுப்பாளர்களை நியமித்து அனைத்து மாநிலங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்தியுள்ளது.
குறிப்பாக தென் மாநிலங்களில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பொறுப்பாளர்களுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் பாஜக தலைமை தெரிவித்ததாக கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை, எஸ்.வி.சேகர் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹெச்.ராஜா உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபடவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் குழப்பம் ஏற்படுவதாக பாஜக தலைமைக்கு புகார் போனதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அனைத்து பாஜக பொறுப்பாளர்களும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று பாஜக தலைமை உத்தரவு போட்டதாக தெரிவிகின்றனர்.