Skip to main content

பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி உறுதி?

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
BJP - PMK. Alliance confirmed
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாக 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் கடந்த 24 ஆம் தேதி (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்க கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க. - பா.ம.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு எட்டு முதல் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர்களுடன் அன்புமணி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டுமானால் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் தற்போது நிபந்தனைகள் ஏதும் இன்றி பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சார்ந்த செய்திகள்