அதிமுக பாஜக கூட்டணியில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் பாஜக தரப்பில் அண்ணாமலையும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஒரு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அமித்ஷாவிடம் தனியாக பேசிவிட்டு வந்திருக்கிறேன். பல கருத்துக்களைப் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அது எனக்கும் அமித்ஷாவிற்கும் இருக்கக்கூடிய கருத்துக்கள். அதனை பத்திரிகை மூலமாக வெளியே பேசுவது நல்லா இருக்காது. அதில் தமிழகம் சார்பாக பல முக்கிய விஷயங்களையும், பாஜக எப்படி செல்ல வேண்டும்; தொண்டர்களுடைய விருப்பம் என்ன; தலைவர்களின் விருப்பம் என்ன; 2024 எப்படி இருக்கும்; 2026 எப்படி இருக்கும்; 2030 எப்படி இருக்கும்; தமிழக அரசியல் சூழல் எப்படி மாறி வருகிறது என பல கருத்துக்களைப் பேசியுள்ளோம். அதே நேரத்தில் எப்பொழுதுமே, எங்கேயுமே அவர்கள் நமது கூட்டணியில் இல்லை என்ற கருத்தை நான் சொல்லவில்லை. இன்றைக்கும் அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது. எந்த கட்சியின் மீதும் பாஜகவுக்கு கோபம் இல்லை” என்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எங்களைப் பொறுத்தவரைக்கும் மத்தியிலே ஆளுகின்ற தேசிய கட்சியான பாஜக, ஜெயலலிதா இருக்கும் போதும் சரி ஜெயலலிதா மறைந்த பிறகும் சரி கூட்டணி பேச்சை பொறுத்தவரையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜக தேசிய தலைவர் நட்டாவும் தான் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்தியில் இருப்பவர்கள் தான் கூட்டணியை இறுதி செய்பவர்கள் மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல” என்றார்.