குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, பாஜக கட்சியின் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நெல்லை கண்ணன் நேற்று இரவு பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார். அவர்க்கு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் நெல்லை கண்ணனை வருகின்ற 13.01.2020 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை குறித்து நெல்லைக் கண்ணன் பேசியதன் ஆழம் பார்த்துத்தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
அப்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கல்லூரிக்குள் குண்டு வீசப்படும் என்று கூறியது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு கல்லூரிக்குள் குண்டு வீசப்படும் என ஹெச். ராஜா கூறிய கருத்து குறித்து யாராவது புகார் அளித்தால், அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஹெச்.ராஜா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.